புதன், 5 ஆகஸ்ட், 2015

ஓர் ஆடி மாதப் பயணத்தில்...

அதிரடியாய் தொடங்கியது
அந்தப் பயணம். ஓர்
ஆடிமாதத் தொடக்கத்தில்.

உடன் இரு பெண்களுடன்
வந்தான் ஒருவன். என்னுடன்
வந்தவரை இடம்பெயர்ந்தமரப் பணித்தான்.
அவர் மறுத்தார் அவ்விடத்தில் பெண்டீர் இருந்ததன்
காரணமாக நாகரீகம் கருதி.

சன்னலோர இருக்கை வேண்டுமென்றான்
சங்கோஜத்தோடு இடமளித்தார் என் நண்பர்.
மெத்தப் படித்தவன் போல் 
உடையும், உடைமைகளும், உடன் வந்தோரும்
உறக்கப் பேசின.

ஓரிரு மணி நேரம் சென்றபின்
உணவுண்ண வேண்டுமென்று - என்
உடன் வந்தவரை இடம்பெயரக் கேட்டுக்கொண்டான்
இடம்பெயர்ந்தார் என்னவரும் சன்னலோர
இருக்கை கிடைக்குமென்பதால்.

உண்டபின் உறங்க வேண்டும் என்றான்
உடல் அலுப்பாலும், உறக்கமின்மையாலும்
உறங்கிவிட்ட என் நண்பரை உசுப்பி.
உணர்ச்சி வசப்படாமல் இடம் தந்து
எழுந்து நின்றார் அவரும்.

இதனிடையே புத்தகம் விற்பர், மாற்றுத்திறனாளிகள்,
உணவு விற்பவர், குடிநீர் விற்பவர்,
இரந்து உண்பவர், முதியோர், எனப்
பல முகங்கள்,பல குரல்கள், பல இசைகள்
வந்து சென்றன இரயிலின் இரைச்சலையும் தாண்டி.

அரிதாய் ஓர் சம்பவம்,
இரந்து கையேந்தி தவழ்ந்து பாடி வந்தார் ஒருவர்,
கைக்குழந்தையுடன் இரந்து வந்த, பெண் ஒருத்தி
கடிந்து கொண்டாள் எனக்கு முன்னால்
செல்ல வேண்டாம் என்று!
ஆற்றறொண்ணா கோபத்துடன் அவளைக் குறைகூறி
எழுந்து நடந்தான் தவழ்ந்து வந்தவன்.
இதைக் கண்டு நகைத்தனர் அனைவரும்,
அவனும் நகைத்தான் போலிகள் என்று சொல்லி.

கைப்பைகளை விற்று வந்தாள் பெண் ஒருத்தி
காட்டக் கேட்ட பயணிடம்
காட்டினாள் கலர்கலராய்தான் வைத்திருந்தவற்றை.
அங்கே இயற்கை உபாதைகளுக்காக
குறுக்கே கடந்து சென்றவர்களையெல்லாம்
கடிந்து கொண்டாள் கோபம் கொப்பளிக்க.

தனக்கென்ன என்று அமைதியாக இருந்தனர்
அமர்ந்திருந்தோர் எல்லாம்
தன்னியல்பினன் தானே என்று.

இருந்தாலும் நிறையத் தந்தது- எனக்கு
இவ்வினிய இரயில் பயணம்
தான் மட்டுமே சுகமாக வாழ வேண்டுமென்ற
சர்வாதிகார மனநிலையையும்,
தனக்கு ஆபத்து எனில் கூட்டணியை
தகர்த்தெறிகிற துரோக மனநிலையையும்,
விற்பனை சரிந்ததால் வில்லங்கம் செய்யத் துடிக்கும்
விபரீத மனநிலையையும்,
அனைத்தையும் ஏற்றுக் கொண்ட
ஆன்மீக மனநிலையையும் - கண்டேன்
அப்பாவி பாமரர்களின் வாழ்வினில்

அயல் நாட்டாரிடமும், அரசியல்வாதிகளிடமும்
அமைதி, நேர்மை, சமரசம் பற்றிப்
பேசுதல் தகுமோ இனி? - தெளிந்தேன்.



   - வி.பாலா