சனி, 12 மே, 2018

நகைப்பெட்டி

நான் கொண்ட உரு
மாறவில்லை

நான் வைத்திருக்கும் பொருட்களும்
மாறவில்லை

நான்கு, ஐந்து பரம்பரை
தாண்டியும்
துலக்கி வைத்த
வெள்ளிச் செம்பாய் - நான்
கைகள் மட்டும் மாறுகிறேன்

இன்றும்    
வரதட்சணையாய்!!!



/வி. பாலா/-
bala.vkp@gmail.com

99761 44451 

பணப்பெட்டி

என் வீட்டின்
பூஜையறையில்
மிக முக்கிய இடமெனக்கு
எவரும் எளிதில் 
தொட்டுக் கூடப்
பார்க்க இயலாப் பாதுகாப்பு!

தாயானாலும் 
பிள்ளையானாலும் 
மனைவியே ஆனாலும்,
தள்ளி நின்றே 
பார்த்துக் கொள்ளலாம்!

என்னுள் இருக்கும் 
காகிதத்தாலே
எனக்கிந்த பெருமை!

அதில்  
வங்கியிலிருந்து 
நேராய் வந்த
வாசமும் இருக்கும்!

வலிகளோடு 
வாங்கி வந்த
ரணங்களும் இருக்கும்!

பணம் என்ற அந்தத் தாள்
எப்படி வந்தால் என்ன
இந்த மனிதர்க்கு?


/வி. பாலா/-
bala.vkp@gmail.com

99761 44451 

அஞ்சல் பெட்டி

அணு ரகசியம் முதல்
அண்டை வீடு, அண்டமென
அனைத்தைப் பற்றிய
தகவல்களையும்
அங்கிங்கென எங்கும்
சேர்த்து வந்தேன்
சேதாரமின்றி!

எத்தகைய தகவலும்
என்னுள் விழுந்தே
எங்கும் சென்றது
வெடிகுண்டுகளுக்கும்,
இயற்கைப் பேரிடர்களுக்கும்
நடுவே நலமாக!

ஆண்டுகொரு முறையாவது
அட்டைகளை அனுப்பி
அன்பைப் புதுப்பித்து புதுப்பித்து
வளர்ந்தது மனிதம்!

அஞ்சல் வழியில்
அறிவியல் வளர்த்த அறிஞர்கள்
ஆய்ந்தறிந்த அலைபேசி, கணினி
ஆகியவற்றால் அழிந்து வருகிறேன் நான்.

யாரும் சட்டை செய்யாத
குப்பைத் தொட்டியாய்!  


/வி. பாலா/-
bala.vkp@gmail.com

99761 44451 

திங்கள், 12 ஜூன், 2017

தாயின் கதறல்

ஆதி முதல்
அந்தம் வரை
அவன் வாழ்க்கைக்கு
நாந்தேவை.

அணு முதல்
அனைத்துயிருக்கும்
நான் கூடு
இந்த மனுசப் பய
வந்ததால
ஆனேன்
ரொம்பச் சூடு!

முந்நூறு கோடிக்கு மேல்
மக்களைப் பெத்தவ
மூச்சுவிட முடியாமா
முக்கித் தவிக்கிறேன்
சூட்டாலா...

பால்வெளியில் இருக்கேன்
நான் ஒரு மூல,
என்னைப்போல
யாரேனும் இருக்கா
எனப் பார்ப்பதே  
அவன் வேல!

என்னென்னமோ
கண்டுபுடிச்சு
எங்கெங்கோ
அனுப்பி வைக்கான்
என்னை
ஒருநாளும்
கண்டுக்கலயே!

உள்ள கொதிக்கிற
என் குமுறலை
எரிமலையா
எச்சரிச்சும்
எஞ்சூடு தணிக்கலயே!

இன்னும்
எத்தனை
வருசம் இருந்திடுவ
என்னைய

எரிச்சு?

சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்காக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவது பெருமைையாய் இருக்கிறது.
ஆனால் நமக்கு இது மட்டும் போதாது; நாம் இப்போராட்டத்தில் காட்டிய வீரம், ஒழுங்கு, கண்ணியம், பொறுப்புணர்வு, பெண்மை போற்றுதல், மனித நேயம், சக மனிதனுக்கு உதவுதல் போன்ற ஆகச் சிறந்த குணங்கள் அனைவரிடமும் வெளிப்பட்டன. இவை எந்நாளும் நம்மில் குடி கொண்டு நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக, நாம் செய்ய வேண்டியவை என நான் கருதும் கருத்துக்கள்
1) நம் கண் முன்னர் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கண்டிப்போம் ஒன்றை கூடி அமைதியான முறையில்,
2) பெண்மையை மதித்துப் போற்றுவோம்; தேவையெனில் உதவி செய்து காத்திடுவோம்.
3) சினிமா, நடிகர், நடிகைகள், விளையாட்டு, போன்றவற்றை பொழுது போக்காக மட்டுமே காண்போம்.
4) ஊழல் செய்யும் மனிதர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் வண்ணம் பிரபலப் படுத்தி பதவி நீக்கம் செய்ய வழிகோலுவோம்.
5) ஒட்டுக்குப் பணம் வாங்காமல் கண்ணியம் காப்போம்.
6) தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவு நல்குவோம்; அருகில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் சோதிப்போம்.
7) இயற்கையைக் காப்போம்; நீர் தேவை அறிந்து செலவிடுவோம்; மரம் வளர்க்கப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.
8) பாரம்பரியம் பற்றி தெளிந்து சொல்லுவோம்;
9) வீடுகளில் நாடகங்களைத் தவிர்த்து பயனுள்ள செய்திகளை விவாதிப்போம்.
10) உடல் நலம், மனநலம், சுற்றுப்புற நலம் பேணுவோம்.
வி. பாலா/
21.1.17

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மனமுள்ள தமிழனமே

தமிழா 
உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?

ஆற்று மணலை 
அள்ளி அனுப்பியபோது
வராத கோபம்,

இருட்டில்
இயற்கை
வளமனைத்தும்
இல்லாமல்செய்தபோது
வராதகோபம்,


அரசின் இலவச 
அரிசியை 
அமுக்கி அனுப்பியபோது
வராத கோபம்,

ஏய்த்துப் பிழைக்கும் 
அரசியல் வியாபாரி
எளியவரை ஏளனம் செய்தபோது
வராத கோபம்,

வாய்க்கால், வரப்புகள்
குளம், குட்டைகள்,
ஆறு, அணைகள் 
தூர்வாரப் படாதபோது
வராத கோபம்,

பச்சிளம் பிஞ்சுகள்
பாலியல் தொல்லைக்கு
பலியானபோது 
வராத கோபம்,

நள்ளிரவு நேரங்களில்
நயமாய் விலைவாசி
ஏற்றப்படும்போது
வராத கோபம்,

காசு கொடுத்துக், 
கடவுளையும்,
கல்வியையும்
கைக்கொள்ளும்போது
வராதகோபம்,

எந்தச் சான்றிதழுக்கும்,
காந்தி நோட்டைக்
நீட்டும்போது 
வராத கோபம்,

அடுத்தவன்
அணைக்கட்டிலிருந்து
நீருக்காகக் கையேந்தும் போது
வருவது ஏனோ?

அனைத்தையும், உருவாக்கும்,
இளைஞர்பலமும், அறிவுபலமும்,
அளவிட முடியாது உள்ளபோது

அதிகார வர்க்கத்தின் 
மடைமையினால்
மடியேந்தி நிற்கிறதே

கலாச்சாரம் கண்டுபிடித்த
மனமுள்ள தமிழனமே.....

வி. பாலா



சனி, 13 பிப்ரவரி, 2016

மழை!!!

மோகம் தீர்த்துக் கொள்கிறதோ என்னவோ..
மண்ணை விடாமல் 
முத்தமிட்டு!!!

-வி.பாலா